திங்கள், செப்டம்பர் 12, 2011

பொதுவழிகளில்

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்'' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், 'சாலையின் உரிமை என்ன? இறைத்தூதர் அவர்களே!'' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள். ஆதார நூல்: புகாரி 6229, அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

  • அந்நியப் பெண்களைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும்,
  • பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ துன்பம் தராமலிருப்பதும்,
  • சலாமுக்கு பதிலுரைப்பதும்,
  • நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகளாகும்.

மேற்காணும் பெருமானாரின் நான்கு கட்டளைகளைப் பின்பற்ற முடியுமென்றால் மக்கள் நடமாடும்  பகுதிகளில் அமர்ந்துப் பேசுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

மேற்கானும் பெருமானாரின் நான்கு கட்டளைகளைப் பின்பற்ற முடியாதென்றால் மக்கள் நடமாடும்  பகுதிகளில் அமர்ந்துப் பேசுவதிலிருந்து ஒவ்வொருவரும் தவிர்ந்து கொள்ளுதல் நல்லது.

காரணம்

இன்று அதிகமான பிரச்சனைகள் குழப்பங்கள், பெண்களுக்கெதிரான அநீதிகள், போன்றவைகள் உருவாவதற்கு பெரும்பாலும் சாலை ஓரங்களில் நின்று கொண்டும், குறுகலான சாலைகளின் சிறிய பாலங்களின் மீது அமர்ந்து கொண்டும், டீ கடை, பெட்டிக்கடை வாசல்களில் நின்று கொண்டும்  அரட்டைகளிலும் , வீண் விவாதங்களிலும் ஈடுபடுவதே முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.
அரசியலைப் பற்றியோ, அல்லது ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பற்றியோ, புதிதாக ரிலீசானப் படத்தைப் பற்றியோ, ஊருக்குள் விமர்சனத்திற்குள்ளான சில குடும்பத்தவர்களைப் பற்றியோ, காரசாரமாக பேசிக் கொண்டிருக்கையில் ஒவ்வொருவரும் தனது வாதம் வெல்ல வெண்டும் என்று கருத்துகளை எடுத்து வைப்பார்கள் இதுவே இறுதியில் அவர்களுடைய மத்தியில் கலகம் வெடித்து சண்டை மூண்டு விடும். அதன் பிறகு அது குடும்பச் சண்டையாக மாறும்.

வேலை வெட்டி இல்லாத இவர்களால் உருவான இந்தச் சண்டை அன்றாடம் கஸ்டப் பட்டு குடும்பத்தை காப்பாற்றும் பெரியவர்களுக்கு மத்தியில் பெரிய பிரச்சனையாக உருமாறி இறுதியில் அது அவர்களை ஜென்ம விரோதிகளாக மாற்றி விடும். இது ஒருப் புறம் அடுத்தது பாதசாரிகளுக்கு இவர்களுடைய அரட்டைகளால் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தும்

எவ்வாறு ?

பேச்சு ஒருப் பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே அந்த வழியாக ஒருப் பெண் செல்ல நேரிட்டால் அந்தப்பெண் அவர்களை கடப்பதற்குள் அச்சத்தால் நடு நடுங்கி வியர்வையில் குளித்தவளாக அவர்களைக் கடந்து ஒருப் பெருமூச்சு விடுவாள். காரணம் இப்பெண்ணைக் கண்டதும் அவர்கள் பேசிக் கொண்டிருந்த டாப்பிக்கிலிருந்து மாறி இப்பெண்ணுடைய நடை உடை பாவனையை கிண்டலடிக்க ஆரம்பித்து விடுவார்கள் ஒருப் பெண் வீதியில் வந்து விட்டாலே எதையாவது கமென்ட் அடிக்க வேண்டும், அல்லது குறைந்தது விரசமாகப் பார்க்க வேண்டும் என்பது  ஆண்களுடைய தார்மீக உரிமை போல் நிணைத்துக் கொண்டு பாதசாரிப் பெண்களை நிலைகுலையச் செய்து விடுகின்றனர் .

  • அந்நியப் பெண்களைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக் கொள்வது,

மக்கள் நடமாடும் பொது வழிகளில் அமர்ந்து தான் ஆகவேண்டும் எனும் நிலை வந்தால் அமரும் அந்த இடத்திற்கான உரிமைகளில் ஒன்றாக அந்நியப் பெண்களைப் பார்க்காமல் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் அல்லாஹ்வின் சட்டத்தை பெருமானார் (ஸல்) அவர்கள்  கடமையாக்கினார்கள். 

எல்லாம் அறிந்த அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் 1400 வருடங்களுக்கு முன்பே ஆண்களைப் போல் பெண்களும் சுதந்திரமாக வீதியில் நடப்பதற்காக பெண்களை நோக்கும் ஆண்களுடையப் விரசப் பார்வையை தடைசெய்தான். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய எண்ணற்ற சமஉரிமைகளில் இதுவும் போற்றத் தக்க உரிமையாகும்.

24:30. (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

24:31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! ....

  • பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ துன்பம் தராமலிருப்பது,

மேற்குறிப்பிட்ட பொதுவழிகளில் ஒரு டாப்பிக் நடந்து கொண்டிருக்கம் போது அதிலிருப்பவருக்கு பிடிக்காத ஒருவர் அவ்வழியே செல்ல நேரிட்டால் அவரைப் பார்த்ததும் இவர் தனது மனதில் அவர் மீது உள்ள வெறுப்பைக் கொட்டுவதற்கு நண்பர்களுடனான தெரு வீதி அரட்டையை சாதகமாக்கிக் கொள்வார் அது இவரைப் பிடிக்காத அந்த பாதசாரிக்கு நெருடலை ஏற்படுத்தும் பலர் முன்னிலையில் சங்கட்டப்படுவார். இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது அதனால் சொல்லால், செயலால் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாமலிருக்க வேண்டும் என்று சாலைகளில் அமரும்போது பிறர் கண்ணியம் கருதி பேணச் சொல்கிறது இஸ்லாம்.

  • சலாமுக்கு பதிலுரைப்பது,

பாதசாரிகளுக்கு சொல்லால் செயலால் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாமல் பொதுவழிகளில் இருந்து பேசவேண்டும் என்றால் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது போகின்ற வருகின்றவர்கள் கூறும் ஸலாமுக்கு அமர்நிதிருப்பவர்கள் பதில் ''ஸலாம்'' சொல்லிக்  கொண்டே  இருக்க வேண்டும் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கட்டளைப் பிறப்பித்தார்கள் காரணம் படுஜோராக விவாதம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும்போது எதிரில் யாராவது '' ஸலாம் '' சொன்னால் பதில் ஸலாம் சொல்ல முடியாத அளவுக்கு வேகமாக விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் பதில் சொல்ல விடாமல் ஷைத்தான் தடுப்பான். இதன் மூலமாக பாதசாரிகளுக்கும் அங்கு கூடிநின்று அரட்டையில் ஈடுபடுபவர்களுக்கும் மத்தியில் பிணக்கு ஏற்படும்.

ஸலாம் சகோதரத்துவத்தை இணைக்கும் பாலமாகும். ஸலாம் இல்லை என்றால் சகோதரத்துவம் முறிந்து விடும் அதனால் '' ஸலாம் '' என்ற  '' அமைதி '' அமர்ந்திருப்பவர்கள் மீதும், பாதசாரிகளின் மீதும் பரஸ்பரம் தவழும் போது தாமாகப் பிரச்சனைகளும், பிணக்குகளும் பறந்து விடும்.

  • நன்மை புரியும் படி கட்டளையிடுவதும்,
  • தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகளாகும்.

இவ்வுலகில் ஒருவர் வாழ்ந்த காலத்தில் அவரால் இன்னொருவர் பலனடைந்ததாக இருக்க வேண்டும்
.... மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.;....22:40

என்ற மேற்கானும் திருமறைவசனத்தின் படி நன்மையை ஏவித்தீமையைத் தடுக்கும் ஒருக் கூட்டத்தினர் உலகில் இல்லாவிடில் தீமைகள் மேலோங்கி விடும் இறைவன் கூறியதுப்போன்று மத பாகுபாடின்றி அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அகற்றப்பட்டு இறைமறுப்பாளர்கள் மட்டும் எஞ்சி இருப்பர். அவர்கள் மக்களை கற்காலத்திற்கு அனுப்பி விடுவர் மனிதனை மனிதன் அடித்து உண்ணும் காலம் வந்துவிடும். அதனால் ஓரிடத்தில் குழுவாக சிலர் அமர்ந்து விட்டால் அவ்விடத்தில் தங்களுக்கும் பிற மக்களுக்கும் பலன் தரக்கூடிய நல்ல விஷயங்களை, ஆன்மீக செய்திகளை அதிகமாகப் பேசவேண்டும் இதனால் நம்மைப் போன்றே பிறரும் நல்லறங்கள் புரிவதற்கு அது வழிகோலும். அதுப்போன்று நல்ல விஷயங்களை உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் சில செய்திகளை தாங்களும் செவியுறுவதற்காக பாதசாரிகளும் உட்கார்ந்து விடுவார்கள்.

மேற்காணும் பெருமானாரின் நான்கு கட்டளைகளைப் பின்பற்ற முடியுமென்றால் மக்கள் நடமாடும்  பகுதிகளில் அமர்ந்துப் பேசுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

மேற்கானும் பெருமானாரின் நான்கு கட்டளைகளைப் பின்பற்ற முடியாதென்றால் மக்கள் நடமாடும்  பகுதிகளில் அமர்ந்துப் பேசுவதிலிருந்து ஒவ்வொருவரும் தவிர்ந்து கொள்ளுதல் நல்லது.

அத்துடன் இது தேர்தல் நேரம் என்பதால் மிகவும் ஜாக்ரதையாக நடந்து கொள்ளுங்கள் வேட்பாளர்கள் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றவர்களை நம்பாதீர்கள் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசாதீர்கள் வேட்பாளர்கள் அனைவரும் வேடதாரிகள்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

செல்போன் பேசுவோர் கவனத்திற்கு !


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பலர் தங்களுடைய செல்போனை சார்ஜரில் இட்டிருக்கும் பொழுது போன் கால் வந்தால் சார்ஜரிலிந்து செல்போனை உருவாமல் அப்படியே எடுத்துப் பேசுவது இன்று அதிகமானோருக்கு பழக்கமாகி விட்டது.

இது பல நேரங்களில் சிறிய, சிறிய ஆபத்துகளையும், சில நேரங்களில் பேராபத்தையும் விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. 

செல்போன் வெளிவரத்தொடங்கிய ஆரம்ப காலத்தில் அது பணக்காரர்களுக்கு மட்டும் உபயோகமாக இருந்ததால் செல்போன் நிருவனங்கள் அதிகமான விலைக்கு தரமான செல்போன்களை தயாரித்து வழங்கியது.

இன்று ஏழை, பணக்காரர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் செல்போன்களை உபயோகிப்பதால் ஏராளமானப் போட்டி நிருவனங்கள் உருவாகி பணம் பண்ணும் நோக்கில் மலிவான விலையில் செல்போன்களை தயாரித்து உலகச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

அவ்வாறு மலிவு விலையில் தயாரிக்கப்படும் செல்போன்களின் உள்ளே தரம் தாழ்ந்த பேட்டரிகள் பொறுத்தப்படுகின்றன. அவ்வாறு பொருத்தப்படும் தரம் தாழ்ந்த பேட்டரிகள் அதிகத் திறன் கொண்ட மின்சாரத்தை தாங்கும் சக்தி  கொண்டவைகளாக இருப்பதில்லை.


அதனால் அதிவேகமாகப் பாய்ந்து வரும் மின்சாரத்தை வெளியில் கக்குகின்றன, அல்லது வெடித்து சிதறி விடுகின்றது.

சார்ஜரில் இருக்கும் செல்போன்கள் ஒலிக்கத் தொடங்கியதும் ஓடோடி வருபவர்கள் அவசரமாக கையில் எடுக்கும் போது, அல்லது காதில் வைத்து பேசிக் கொண்டிருக்கும் போது பேட்டரிக்கு வெளியில் கசியும் மின்சாரம் பாய்ந்து கை, அல்லது காதுடன் முகத்தைப் பதம் பார்த்து விடுகிறது. அது சிலருடைய உயிருக்கே உலை வைத்து விடுகிறது

சமீபத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்து புதுப்பேட்டை என்ற கிராமத்தில் சிட்காட் என்ற தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சரித்யபோரா என்ற 21 வயது இளைஞர் 7-8-2010 அன்று சார்ஜரில் இருந்த தனது செல்போனில் ஒலிக்கும் அழைப்பைக் கேட்டு ஓடிவந்தவர் சார்ஜரிலிருந்து செல்போனை ரிமூவ் செய்யாமல் எடுத்துப் பேசிக்கொண்டிருக்கும் போது மின்சாரம் பாய்ந்து கை, முகம் கருகி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

செல்போனிலிருந்து சார்ஜரை உருவாமல் பேசுவது இன்று அதிகமான மக்களிடம் இருக்கும் அலச்சியப் போக்காகும் இதை தவிர்க்க வேண்டும்.

இதில் அதிகமான அலச்சியப் போக்கை கடைப் பிடிப்பது பெண்களாகும். சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அல்லது துணி துவைத்துக் கொண்டிருக்கும் பொழுது செல்போன் மணியை கேட்டு வேகமாக ஓடிவந்து ஈரமான கையுடன் அப்படியே சார்ஜரிலிருந்து செல்போனை ரிமூவ் செய்யாமல் பேசுவதைப் பார்க்கின்றோம்.

இன்னும் சிலப் பெண்கள் தோள் புஜத்திற்கும், காதுக்கும் இடையில் போனை இடுக்கிக் கொண்டு சாய்ந்த வண்ணம் எரியும் நெருப்புடன் கூடிய அடுப்பருகே நின்று சாவகாசமாக பேசிக் கொண்டே சமையல் செய்கின்றனர்.


இதுப் பேராபத்தை விளைவிப்பதை அறிவதில்லை.

இனிவரும் காலங்களிலாவது செல்போன் சார்ஜரில் இருக்கும் போது போன் கால் வந்தால் செல்போனிலிருந்து சார்ஜரை ரிமூவ் செய்து விட்டுப் பேசலாம் மிஸ்டு கால் விழுந்து விடுமோ என்ற அச்சத்தாலும் அவசரப் பட வேண்டாம் உயிர் விலை மதிப்பற்றது,

செல்போன் இன்றியமையாதது என்பதால் சிறிது விலை அதிகமாக இருந்தாலும் தரமான கம்பெனிகளின் செல்போன்களை வாங்குவதற்கு முயற்சி செய்வோம்.  வரும் முன் காப்போம்.
உணர்வுக்கு எழுதிய கட்டுரை



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

சவுதி அரேபியாவில்

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். 3:104


சவுதி அரேபியாவில் பணிபுரிய வருவோர் கவனத்திற்கு !

சவுதி அரேபியாவிற்கு பணிப்புரிய வருவோர் கம்பெனிகளில் அல்லது, வீடுகளில், தோட்டங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளம் தரவில்லை என்றால், அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலை தரவில்லை என்றால், அல்லது மாதம் தோறும் சம்பளம் தரவில்லை என்றால், இன்னும் முதலாளி, அல்லது மேலாளர் போன்றோர் அடித்து வேலை வாங்குபவர் என்றால் கிடைக்கின்ற சம்பளத்தை பெற்றுக்கொண்டு கொடுக்கின்ற வேலையை செய்துகொண்டு அடிக்கின்ற அடியை வாங்கிக் கொண்டு தங்களை அடிமை படுத்திக் கொள்பவர்கள் ஒரு வகையினர்.

மேற்காணும் விதம் ஒப்பந்த மீறல் நடைபெற்றால் சம்பள பாக்கியையும், இதர சலுகைகளையும், பாஸ்போர்ட்டையும்  அவரிடமே விட்டு விட்டு வேறுப் பகுதிகளில் சென்று தலைமறைவாக வேலை செய்ய நினைப்பவர்கள் மற்றொரு வகையினர்.

இரண்டாவது வகையினர் தலைமறைவாக வேலை செய்யும் பொழுது லேபர் செக்கிங்கில் பிடிபட்டால் சிறையில் அடைக்கப்பட்டு உறவினர்கள், நன்பர்கள் மூலம் சிறைக்குள் பயண டிக்கெட் அனுப்பப்பட்டு இந்திய தூதரகத்திலிருந்து எமர்ஜென்ஸி பாஸ்போர்ட் மூலம் தாயகத்திற்கு அனுப்பப்படுகின்றனர் இது ஒரு வழி இதை இக்காமா ஜெயில் வழி என்றும் அழைக்கப்படுவதுண்டு. 

மக்கா, மதீனாவிற்கு ஸியாரத் வருவோர் தங்களுடைய பாஸ்போர்ட், பயண டிக்கெட்டை தொழைத்து விட்டால் அவர்களை கருணையின் அடிப்படையில் அரசாங்கமே பயண டிக்கெட் இலவசமாக கொடுத்து ஜெத்தாவிலிருந்து அனுப்பிக்கொண்டிருக்கிறது. 

மேற்காணும் இரண்டாவது வகையினர் இடைத் தரகர்கள் மூலம் தங்களையும் புனித பயண யாத்ரீகர்களாக காட்டிக்கொண்டு பாஸ்போர்ட் தொழைந்து விட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் பயணிக்கும் வழியில் பயணிக்கத் தொடங்கினர் இது இரண்டாவது வழி. இதை உம்ரா ஜெயில் வழி என்றும் அழைக்கப்படுவதுண்டு.

இந்த மனிதாபிமான அடிப்படையிலான நல்ல திட்டத்தை வேலை நிமித்தம் வருவோர் தவறாக பயன்படுத்துவதை அறிந்த சவுதி அரசாங்கம் இவ்வழியாக பயணிப்போர் ஐந்து வருடத்திற்கு சவுதிக்குள் வரக்கூடாது என்று சட்டமியற்றி அவரது கை ரேகை, மற்றும் கண்களை ஸ்கேனிங் செய்து சவுதி அரேபியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தது.

இதே வேறு நாடாக இருந்தால் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த திட்டத்தையே ரத்து செய்து இருப்பார்கள் ஆனால் புனிதஸ்தலங்கள் இருப்பதாலும், யாத்ரீகர்கள் தொடர்ந்து வருகை தந்து கொண்டிருப்பதாலும் இத்திட்டத்தை ரத்துசெய்யாமல் இதை தவறாக பயன்படுத்துவோரை மட்டும் கட்டுப்படுத்தியது.

ஒப்பந்ததாரருக்கும், பாணியாட்களுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும், ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தை மீறும்பொழுது அதை தீர்த்து வைப்பதற்காக லேபர்கோர்ட்டை (தொழிலாளர்கள் அமைச்சகம்) சவுதி அரசாங்கம் நிறுவி உள்ளது. சவுதி அரேபியாவில் இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாற்றுவோருக்கு மேற்காணும் விதம் ஒப்பந்ததாரர்களால் அநீதி இழைக்கப்பட்டால் விசாரித்து நீதி வழங்குவதற்காக எல்லா மொழிபேசக் கூடியவர்களுக்கும் மொழியாக்கம் செய்து கொடுப்பதற்காக அந்தந்த மொழியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை நன்றாக அறிந்துகொண்டே இந்த வழியாக தங்களுடைய பிரச்சனைகளை தீரத்துக்கொள்ள முயற்சிக்காமல் மேற்காணும் இரண்டு வழிகளில் பயணித்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக்கொள்வதுடன் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நல்ல சலுகையும், பாதிக்கப்பட்டவர்ளை விசாரித்து நீதி வழங்குவதற்காக சட்டமியற்றி அதற்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி செயல்படுகின்ற சவுதிஅரேபியா மற்றும் அரபுநாடுகளை பிறநாடுகளின் விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றனர். ஏராளமானோர் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு முறையாக இந்த வழியில் சென்று நீதி கிடைக்கப் போராடாதக் காரணத்தால் பாதிப்பு இவர்களுக்குத் தானேத் தவிற ஒப்பந்ததாரருக்கு அல்ல.
சமீபத்தில் அல்கஸீம் புஃகைரியாவில் நடந்த படுகொலையை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் அந்த சகோதரர் வந்ததிலிருந்தே அவர் முதலாளி எதற்கெடுத்தாலும் அடித்துக் கொண்டே இருந்திருக்கிறார் முதல் தடவை அடி வாங்கிய உடனேயே லேபர் கோர்ட்டில் தஞ்சம் அடைந்திருந்தால் அந்த சகோதரர் அகால மரணத்தை தழுவவேண்டிய அவசியமே வந்திருக்காது. இதனால் துணிந்து கொலை செய்து விட்டு தற்கொலை என்று திசைத் திருப்பி விடும் நிலை உருவாகி விட்டது. 

ஒருவர் எப்பொழுது தனது கஃபிலை (ஒப்பந்ததாரரை) விட்டு ஓடுகின்றாரோ அன்றே அருகிலுள்ள காவல் நிலையத்தில் அல்லது பாஸ்போர்ட் அலுவலகத்தில் சவுதி அரசாங்கம் தடைசெய்த ஒன்றை செய்துவிட்டு ஓடிவிட்டதாக ஓடியவர் மீது பொய் புகார் எழுதி அவரது பாஸ்போர்ட்டை அவரது ஒப்பந்ததாரர் ஒப்படைத்து விடுவார். இவ்வாறு எழுதிக் கொடுத்தால் தான் அவருக்கு மீண்டும் விசா எடுக்கமுடியும், உங்களுக்கு இழைத்த அநீதியிலிருந்து அவரை காப்பாற்றிக்கொள்ளவும் முடியும். மேற்காணும் வழியில் பயணிப்பதால் உங்களுக்கு அநீதி இழைத்தவருக்கு நீங்களே செய்து கொடுக்கும் சலுகையாகி விடுகிறது.

நான்கு பேர் துணிந்து லேபர் கோர்ட்டில் ஏறிவிட்டால் அத்து மீறும் முதலாளி மார்களின் கொட்டம் தாமாக அடங்கி விடும். ஒருமுறை லேபர்கோர்ட்டில் சென்று புகார் செய்துவிட்டால் சம்மந்தப்பட்ட தொழிலாளியின் பிரச்சனைக்கொப்ப அந்த கம்பெனிக்கு அடுத்த விசா கொடுப்பது பற்றி அரசு அலோசிக்கும் நிலைக்கு தள்ளப்படும். மேலும் தொடர்ந்து புகார்கள் சென்று கொண்டிருந்தால் அரசு சலுகைகள், உரிமங்கள் அiனைத்தும் ரத்து செய்யப்பட்டு கம்பெனி மூடும் நிலைக்கே தள்ளப்படும். இதுபோன்று லேபருக்கு அநீதி இழைத்த பல கம்பெனிகள் மூடப்பட்டிருக்கிறது. பல மஜ்ரா காரர்களுக்கு விசா நிருத்தப்பட்டுள்ளது.

புகார் செய்யப்பட்டபவருக்கு சம்பள பாக்கியா அல்லது சர்வீஸ் பாக்கியா ? இன்னும் என்னப் பிரச்சனையாக இருந்தாலும் லேபர் கோர்ட் மூலம் பலருக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கணக்கு தீர்க்க முடியாத அளவுக்கு கம்பெனியில் வருவாய் இல்லை என்றால் அந்த கம்பெனியிலிருந்து லேபர் கோர்ட் ரிலீஸ் வாங்கிக் கொடுத்து வேறு கம்பெனியில் பணிபுரிய உதவி இருக்கிறது.  

சம்பள பாக்கி, சர்வீஸ் பாக்கி குறைவாக கிடைத்தாலும், அல்லது அறவே கிடைக்க வில்லை என்றாலும் பாஸ்போர்ட், பயண டிக்கெட்டுடன் நிம்மதியாக பயணிக்கலாம். பாஸ்போர்ட்டை இழந்து உம்ரா ஜெயில் வழியாகவோ, இக்காமா ஜெயில் வழியாகவோ அகதிகளாய் உடுத்திய அழுக்கு உடையுடன் பயணித்து மீண்டும் ஐந்து வருடம் திரும்பி வரமுடியாத நிலை ஏற்படாது. கடந்தக் காலங்களில் சவுதியிலிருந்து ஒன்வேயில் பயணித்தால் சுமார் மூன்று வருடம் சவுதிக்குள் வரமுடியாத சட்டம் இருந்தது. அதை இப்பொழுது ( குiபெநச ளலளவநஅ ) வந்தப்பிறகு அரசு தளர்த்தி விட்டார்கள் அதனால் பிரச்சனை இல்லாமல் ஒன்வேயில் ஊர் சென்றால் அடுத்த நாளே அடுத்த விசாவில் மீண்டும் சவுதி வரலாம். அதற்கு ஒரேவழி என்னப் பிரச்சனையாக இருந்தாலும் லேபர் கோர்ட் சென்று பிரச்சனையை தீர்த்துக் கொண்டு பயணிக்க வேண்டும்.

மேற்காணும் விதம் யாருக்காவது அநீதி இழைக்கப்பட்டால் துணைக்கு யாரையும் அழைக்க வேண்டிய அவசியமில்லை டாக்ஸி காரர்களிடம் லேபர்கோர்ட்டில் இறக்கி விடச் சொன்னால் லேபர்கோர்ட் வாசலில் இறக்கிவிடுவார்கள்.

லேபர்கோர்ட்டில் உங்கள் புகார் மனுவை பெற்றுக் கொண்டதும் உங்கள் ஒப்பந்ததாரருக்கான சம்மன் உங்களிடமேக் கொடுத்து அனுப்பப்படும். உங்களிடம் கொடுத்து அனுப்புவதற்கு காரணம் உங்கள் மீது பொய் புகார் எழுதி அருகிலுள்ள காவல் நிலையத்தில் உங்கள் பாஸ்போர்டடை உங்கள் ஒப்பந்ததாரர் ஒப்படைத்து விடக்கூடாது என்பதற்காகவும், இது முதல் உங்களுக்கும் அவருக்குமிடையிலான ஒப்பந்தம் முறிந்து விட்டது என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும், இனி நீங்கள் இந்த அரசின் கௌரவ பிரஜை உங்கள் மீது அவர் அத்து மீறக்கூடாது என்பதற்காகவும் உங்கள் மூலமாகவே அவருக்கு இன்ன தேதியில் வந்து ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படுகிறது.

அதற்கடுத்து இந்திய தூதரகத்திற்கு சென்று நீங்கள் லேபர் கோர்ட்டில் புகார் செய்து அதற்காக பெற்றுக்கொண்ட கடிதத்தை தூதரக அதிகாரியிடம் காண்பித்தால் உங்களுக்கு வழக்கு நடந்து கொண்டிருப்பதை ஊர்ஜிதப் படுத்தும் விதமாக ஆங்கிலத்திலும், அரபியிலும் எழுதி இந்திய அரசு முத்திரைப் பதித்து தருவார்கள் அதை வைத்துக்கொண்டு உங்கள் வழக்கு முடியும்வரை தாராளமாக வெளியில் நடக்;கலாம் போலீஸ் பிடிக்;க மாட்டார்கள்.

ஒப்பந்ததாரரின் மொழி பேசக் கூடியவர்களே லேபர் கோர்ட்டில் அதிகாரிகளாக இருப்பதால் புகாரை திசை திருப்பி விடுவார்கள் என்ற அச்சம் கொள்ள வேண்டாம்  அவ்வாறு கண்டிப்பாக நடக்காது. நீங்கள் அஜமி (அரபி மொழி பேசத் தெரியாதவர்); என்பதாலும், உங்கள் ஒப்பந்ததாரர் (அரபி பேசத் தெரிந்தவர்) என்பதாலும் வக்கீல் வைத்து வாதாடும் நிலையை அரசு ஏற்படுத்த வில்லை. ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதா ? இல்லையா ? என்பதை மட்டும் லேபர் கோர்ட்டில் ஒரு அதிகாரிப் பார்வையிடுவார்.

ஒருவேளை கணக்கு தீர்ப்பதில் கூட, குறைவு ஏற்படலாம் ஆனால் உங்கள் பிரச்சனைத் தீர்க்கப்படாமல் திருப்பி அனுப்ப மாட்டார்கள் உங்கள் பாஸ்போர்ட் உங்களுக்கு கிடைத்து சரியான வழியில் பயணித்து தாயகம் செல்வதற்காக உதவுவார்கள் இதனால் நீங்கள் அடுத்த விசாவில் வேறொரு கம்பெனிக்கு தடையின்றி வரமுடியும்.

இந்த நிலை சவுதியில் புதிதாக உண்டானதல்ல இந்திராகாந்தி காலத்தில் இந்தியாவிலிருந்து பணியாட்கள் சவுதி வரத் தொடங்கியதிலிருந்தே உள்ள நிலை ஆனால் அதிகமானோர் பின்பற்றுவதில்லை அன்றிலிருந்து இன்றுவரை இக்காமா ஜெயில், உம்ரா ஜெயில் நிறைந்தே வழிகிறது. லேபர் கோர்ட் வெறிச்சோடிக் கிடக்கிறது. அன்றாவது இக்காமா ஜெயில், உம்ரா ஜெயில் வழியாகப் பயணித்தால் மீண்டும் சவுதிக்குள் வரலாம் என்ற நிலை இருந்தது இப்பொழுது ஐந்து வருடத்திற்கு வரமுடியாது.

விபரம் தெரியாத ஏராளமான சகோதரர்கள் பல லட்சம் ரூபாயை முடக்கி அடுத்த விசாவில் வந்து ஏர்போர்ட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். 2-2-2011 அன்று ஆம்பூரைச் சேர்ந்த படித்த சகோதரர் ஒருவர் நான் வேலை செய்யும் கம்பெனிக்கு வந்தவர் ரியாத் ஏர்போரட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் விசாரித்த வகையில் அவர் உம்ரா ஜெயில் வழியாக பயணித்தவர் என்பது தெரிய வந்தது.

இந்த நாடு அனுமதித்த ஜனநாயக வழியில் போராடி உங்கள் பிரச்சனைகளை இலகுவாக முடித்துக்கொண்டால் உங்களுக்கும் நல்லது உங்களைப் பார்த்து பிறரும் நடைமுறைப்படுத்தினால் ஒப்பந்ததாரர்கள் அத்து மீற மாட்டார்கள். நீங்கள் உம்ரா ஜெயில் வழியாக பயணிப்பதால் பாதிக்கப்படும் யாத்ரீகர்களும் ஐந்து வருடம் இந்த நாட்டிற்குள் எந்த நோக்கத்திற்காகவும் வரமுடியாத நிலை இதனால் ஏற்படுகிறது பாவம் ஒருப் பக்கம், பழி ஒருப் பக்கம் ஆகலாமா ?

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

உள்ளங்கள் திரும்பாதவரை


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

قال رسول اللَّه صلَّى اللَّه عليه و سلَّم :إنَّ اللَّه لاينظر إلى صوركم و أموالكم ولكن ينظر إلى قلوبكم و أماالكم ( مسلم

'அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாகஇ உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அறிவித்தார். நூல். முஸ்லிம்  5011


உள்ளங்கள் திரும்பாதவரை...



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் என்று பாடக் கேட்டது நினைவிருக்கலாம். உள்ளத்தில் உதிக்கும் ஆயிரம் எண்ணங்களும் உருப்படியானவைகளாக உதிப்பதில்லை ஆயிரத்தில் எத்தனையோ உதித்த வேகத்தில் உள்ளத்தை துருப்பிடிக்கச் செய்து விடுவதுமுண்டு உள்ளம் துருப்பிடித்து விட்டால் உடல் கெடுவதை விளக்கவுமா வேண்டும் ? .

உள்ளத்தை அடிக்கடிக் கழுவி தூய்மையாக்கிக் கொண்டால் தான் தீய எண்ணங்கள் உள்ளத்தில் தங்காது.  

  • உள்ளத்தை எவ்வாறு கழுவுவது ?
  • உள்ளம் எங்கு இருக்கிறது ?
  • உள்ளம் என்ற ஒரு உறுப்பு இருந்தால் அது இருக்கும் இடம் தெரிந்தால் ?

நம்மால் கழுவ முடியவில்லை என்றாலும் டாக்டரிடம்  கொடுத்து பல் சுத்தம் செய்து கொள்வது போல் உள்ளத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ளலாம் ! உள்ளம் நமக்கு மறைவானவை அதில் உதிப்பதம் உதிப்பதில் போவதும், தங்குவதும் மறைவானவைகளாகும்.

நமக்கு மறைவானவைகள் உள்ளத்தில் தங்கி உடலைக் கெடுத்து மறுமை வாழ்வைத் தொலைக்கச் செய்யும் தீய எண்ணங்களை மறைவான இறைவனை தொழுவதன் மூலமே உள்ளத்தை கழுவி பரிசுத்தப்படுத்திக் கொள்ள முடியும். 

தன்னைக் கடந்து செல்லக் கூடிய நேரங்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை இறைவனை நம்பிக்கையுடன் தொழுது உள்ளத்தை தூய்மைப் படுத்திக் கொள்ளச் சொல்கிறது இஸ்லாம்.

அவ்வாறிருந்தால் தான் உள்ளம் செயல்படத் தொடங்கும் சிந்தனைகள் நல்லவைகளை நாடிச் செல்லும் தீயவைகளை விட்டுத் திரும்பும்.

உள்ளங்கள் திரும்பாதவரை
 அல்லாஹ் உங்கள் உருவங்களைப் பார்ப்பதில்லை மாறான உள்ளத்தையேப் பார்க்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இன்றுப் பார்க்கிறோம்.

காசுக்காக தன்னைப் போன்ற சக மனிதர்களின் உயிரை சாய்த்து விடுகிறான் தலைக்கு ஒரு ரேட், காலுக்கு ஒரு ரேட், கைக்கு ஒரு ரேட், என்று விலைப் பேசுகிறான்.

பீறிட்டு ஓடக்கூடிய இரத்தம் அவனது உள்ளத்தை பாதிப்படையச் செய்வதில்லை என்றால் எந்தளவுக்கு உள்ளம் மாசுப் பட்டிருக்கும் ?

ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்ணை கதற கதற கற்பழிக்கிறான் அவளது அழுகுரல் அவனது உள்ளத்தை பாதிப்படையச் செய்வதில்லை என்றால் எந்தளவுக்கு உள்ளம் மாசுப் பட்டிருக்கும் ?

இஸ்லாம் வருவதற்கு முன் இதே நிலை தான் உலகெங்கும் நீடித்திருந்தது இஸ்லாம் வந்து மனிதர்களை இறைவணக்கத்தில் ஈடுபடுத்தி உள்ளங்களை தூய்மைப்படுத்தி உயிரினங்களின் மீது இரக்கம் கொள்ளச் செய்தது.

A is for arab ‘s என்ற தலைப்பில் Jorge rabble என்ற வரலாற்றாசிரியர் salon.com என்ற அமெரிக்க செய்தி ஊடகத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் A millennium ago, while the West was shrouded in darkness, Islam enjoyed a golden age. Lighting in the streets of Cordoba when London was a barbarous pit; religious tolerance in Toledo while pogroms raged from York to Vienna. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மேற்கத்தியர்கள் இருளில் மூழ்கி கிடந்தபோது இஸ்லாமியர்கள் பொற்காலத்தை அனுபவித்துக்கொண்டிருந்தனர், லண்டன் ஒரு காட்டுமிராண்டிப் பகுதியாக இருந்த போது 'கார்டோபா' ஒளிவிளக்கால் மிண்ணிக் கொண்டிருந்தது. 'யார்;க் முதல் வீயென்னாவரை' மனித படுகொலைகள் நடந்த கொண்டிருந்த போது 'டோலிடோ' மதசகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. என்று வர்ணித்திருந்தார்.

யுத்தகளத்திலும்.

மனசாட்சிக்குத் திரையிட்டு கொலை வெறியும், கொள்ளை சிந்தனையும், கற்பழிக்கும் காம உணர்வும் மேலேங்கி நிற்கக் கூடிய யுத்த களத்திலும் கூட உள்ளத்தை செயல்படச் செய்தது இஸ்லாம் மட்டுமே.

கருனையே உருவான காருன்ய நபி(ஸல்) அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் தவிர்க்க முடியாத பல போர்களை சந்திக்க நேரிட்டது அதில் வெற்றிகள் குவிந்த வன்னமிருந்தன ஆனால் எதிராளிகளின் உயிர்களின் மீதும், மானம் மரியாதையின் மீதும் வெற்றியாளர்களின் மனிதாபிமானம் மேலோங்கி நின்றது.

மனிதாபிமானம் மேலோங்கி நின்றதற்கு அவர்களின் உள்ளம் செயல்துடிப்புடன் இருந்தது தான் காரணம். யுத்தத்தில் கலந்து கொண்டு வாளேந்தி போர் புரிய முடியாத பெண்களையும்இ குழந்தைகளையும் கொலலக் கூடாது என்று காருண்ய நபி (ஸல்) அவர்கள் கடுமையான உத்தரவுப் பிறப்பித்தார்கள். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள். என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல் புகாரி 3015.

தோல்வியை ஒப்புக் கொண்டு ஆயுதங்களை கீழேப் போட்டு யுத்தத்தில் சரணடைபவர்களை கொலலக் கூடாது என்றும் உத்தரவிட்டார்கள்

எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹுரக்கா' கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டபோது அவர்இ 'லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று சொல்லஇ அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள்இ 'உஸாமாவே! அவர்இ 'லா இலாஹ இல்லல்லாஹ்'' என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?' என்று கேட்டார்கள். நான்இ '(நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு கூறினார்'' என்று சொன்னேன். (ஆனால்இ என் சமாதானத்தை ஏற்காமல்) நபி(ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால்இ நான்இ '(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!) என்று கூட நினைத்தேன். என்று உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நூல் புகாரி 4269.

மனித உயிர்களின் மீது மட்டும் தான் கருணை கொண்டார்களா காருண்ய நபி.
ஒருமுறை இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் பயணத்திலிருக்கும் போது தம் இயற்கைத் தேவையை நிறைவேற்றிட சென்று விட்டு திரும்பும் பொழுது தோழர்கள் இரு குருவி  குஞ்சுகளுடன் கொஞ்சிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள் அவர்களுக்கு மேலே அவற்றின் தாய் குருவி நிம்மதியிழந்து தன் இரக்கைகளை விரித்துஇ தாழ்த்தி பறந்து வந்து தன் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டு காருண்ய நபியவர்கள் ''இதன் குஞ்சுகளை பறித்து இக்குருவியின் நிம்மதியைக் குலைத்தவர் யார்? அவற்றை அதனிடமே ஒப்படைத்து விடுங்கள்' என்றுக் கடிந்து கொள்கிறார்கள் . அறிவிப்பவர்: அப்துல்லாஹிப்னு மஸ்வூத் நூல்: அபூதாவூது

இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். ஆவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அவர் தம் (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். ஆவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தரவிட்டார். ஆவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, 'உங்களைக் கடித்தது ஒரேயொர் எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?)'' என்று வஹீ (இறைச்செய்தி) அறிவித்(து அவரைக் கண்டித்)தான். ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' நூல்: புகாரி 3319.

மனிதாபிமானத்திற்கு சொர்க்கமே பரிசு 

மனித உயிர்களல்லாது பிற உயிர் பிராணிகளின் மீது இரக்கம் கொள்வதால் பெரும் பாவங்கள் கூட கருனையாளன் அல்லாஹ் மன்னித்து விடுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். ஆந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. ஆதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். ஆவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 3321. 

அதுவல்லாமல் சிலர் சில உயிர் பிராணிகளை வீட்டில் கட்டிப்போட்டு அல்லது கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பார்கள் அவர்களில் பலர் அந்த உயிர் பிராணிகளுக்கு ஆன்மா இல்லாதது போல் அவைகளை மரக்கட்டைகளைப் போல் பொம்மைகளைப் போல் நினைத்துக்கொண்டு அவற்றிற்கான உணவு மற்றும் நீர் போன்ற இன்றியமையாத தேவைகளை முறையாக செய்து கொடுக்க முன்வருவதில்லை விரும்பிய நேரங்களில் உணவோ, நீரோ கொடுப்பதும் மற்ற நேரங்களில் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் சிலரது வாடிக்கை.

அதேப்போன்று உணவு, நீர் மட்டும் தான் அவைகளுக்கு தேவை என்றும் நினைத்து விடக் கூடாது மனித இனத்தைப் போல் அவைகளுக்கும் ஆன்மா இருப்பதால் இனவிருத்தி செய்யும் ஆற்றல் இறைவனால் வழங்கப்பட்டுள்ளதால் அவைகளை அவைகள் வசிக்கக் கூடிய பகுதிகளில் விட்டு விடுவது தான் ஜீவகாருண்யத்திற்கு சிறந்த அடையாளம். 

அவைகளில் எதாவது ஒன்று நம்முடைய வீட்டில் கவனிப்பு குறைவின்றி செத்து விட்டால் அதற்கும் நாம் இறைவனிடம் பதில் சொல்லி ஆக வேண்டும்.

ஒரு பூனையை, அது சாகும்வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். ஆதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்¡ரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை. என்று  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 3482. '

சாதாரண நாயின் தாகத்தை தணித்த விபச்சாரியின் பெரும் பாவம் மொத்தமும் மன்னிக்கப் படுவதாகவும், பூனையைக் கட்டிப்போட்டு சாகடித்ததற்கு தண்டனை நரகம் என்றும் இஸ்லாம் அறிவித்திருக்கிறதென்றால் அவ்வப்பொழுது பொதுமக்கள் நடமாடக் கூடிய இடங்களில் குண்டு வைத்து அப்பாவிகள் சாவதற்கு காரணமாக இருப்பவர்களுக்கு இறைவன் என்ன தண்டனை வழங்குவான் சிந்திப்பர்களா ?

அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது பெயரளவில் முஸ்லீமாக இருந்தாலும் சத்திய இஸ்லாத்தின் சுகந்த காற்றை நுகர்ந்து கொண்டு உள்ளத்தை தூய்மைப் படுத்திக்கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ முன்வருவார்களா

'அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாகஇ உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அறிவித்தார். நூல். முஸ்லிம்  5011



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்